ரசிகர்களின் மனதில் நிலைக்ககூடிய படங்களில் நடிக்க ஆசை… நடிகை மமிதா பைஜூ!

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகை மமிதா பைஜு, தற்போது தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் . ‘டியூட்’, ‘ஜனநாயகன்’, ‘கர’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அவர், தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்துள்ளார். இதுதவிர தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது நடிகர் சூர்யாவுடன் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துவரும் மமிதா பைஜு, ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகவும் காத்திருக்கிறார். இளம் வயதிலேயே தொடர்ந்து பல மொழிகளில் வாய்ப்புகளை பெற்று வரும் அவர், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் மமிதா பைஜு கலந்து கொண்டார். அப்போது மேடையில் உற்சாகமாக நடனமாடிய அவர், ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று விஜய் நடித்த ‘அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எல்லா புகழும் ஒருவனுக்கே’ பாடலின் சில வரிகளை பாடினார். அந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதுடன், பலரும் அதை ட்ரோல் செய்து பகிர்ந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மமிதா பைஜுவின் கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதில், “என்னுடைய ரசிகர்கள் நீண்ட நாட்கள் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய மிகப்பெரிய ஆசை. அதோடு, அன்பும் புரிதலும் நிறைந்த ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்பதும் என் கனவு. எதிர்காலத்தில் ஒரு நாள் என்னுடைய கடந்த கால வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது, உண்மையான மகிழ்ச்சி, மன அமைதி மற்றும் முழுமையான திருப்தி எனக்கு இருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கித்தான் நான் பயணித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading