மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நடிகை ஸ்வேதா மேனன், கடந்த சில மாதங்களாக சங்க நிர்வாகத்தில் ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். சங்க நிர்வாகத்தில் இருந்த அன்சிபா ஹாசன், லட்சுமி பிரியா மற்றும் டினி டாம் ஆகியோருக்கிடையேயான பிரச்சினை காவல்துறை மற்றும் நீதிமன்றம் வரை சென்றதைத் தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்திருந்தார்.
இதையடுத்து கேரள அரசு, நடிகர் ரமேஷ் பிஷாரடி தலைமையில் தற்காலிக நிர்வாகக் குழுவை அமைத்தது. ஆனால் தற்போது நடைபெற்ற ‘அம்மா’ பொதுக்குழு கூட்டத்தில், தாம் அறிவித்த ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக ஸ்வேதா மேனன் அறிவித்துள்ளார். தன்னை திட்டமிட்டு குறிவைப்பதாகவும், தனது நற்பெயரை நிரூபிக்கும் வரை தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மோகன்லால் தலைமையிலான முந்தைய நிர்வாகமும் அடுத்த தேர்தல் வரை பொறுப்பில் தொடர்ந்ததை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ஸ்வேதா மேனன் இதுவரை அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை என்பதை தற்காலிக நிர்வாகக் குழு தலைவர் ரமேஷ் பிஷாரடி உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் ‘அம்மா’ சங்கத்தில் மீண்டும் கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ள நிலையில், ஏற்கனவே ராஜினாமா செய்த நிர்வாக உறுப்பினர்களில் சிலர் ஸ்வேதா மேனனின் முடிவை விமர்சித்து வருகின்றனர்.
