ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் திரிஷா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் பல்வேறு தடைகளை கடந்து இன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை 9 மணி முதல் சிறப்பு காட்சி உட்பட இரண்டு நாட்களுக்கு தினமும் 5 காட்சிகள் திரையிட தமிழக அரசும் அனுமதி வழங்கியிருந்தது. ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட நிதி தொடர்பான பிரச்னையால் மீண்டும் படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் இன்று காலை மற்றும் மதிய காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து பல்வேறு தடைகள் காரணமாக படத்தின் வெளியீடு தாமதமாகி வந்த நிலையில், இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கண்ணீருடன் ஒரு வீடியோ வெளியிட்டு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: “ரசிகர்களிடம் நான் மனமார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது நடந்திருக்கக் கூடாது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட எந்த மாநிலத்திலிருந்தும் காலை 9 மணிக்கே தியேட்டருக்கு படம் பார்க்க வந்திருந்தாலும் உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சினிமா என்பது வாழ்க்கையின் பிரச்னைகளிலிருந்து சிறிது நேரம் வெளியே வர மக்கள் தேர்வு செய்கிற ஒரு விஷயம். அப்படிப்பட்ட ஒரு படத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. நானும் இதை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
இன்று மாலை 6 மணிக்குள் இந்த பிரச்னைகள் அனைத்தும் சரியாகி படம் வெளியாகும் என்று நம்புகிறேன். ‘கருப்பு’ படம் மே 14ஆம் தேதி வெளியாகி பெரிய வெற்றி பெறும் என்று நான் பலமுறை நம்பிக்கையுடன் கூறியிருக்கிறேன். அதற்கான வாக்குறுதியையும் ரசிகர்களிடம் கொடுத்திருக்கிறேன். தற்போது மனவேதனை காரணமாக கண்களில் கண்ணீர் வருகிறது. ஆனால் இந்த எல்லா தடைகளையும் கடவுள் சரி செய்து விடுவார் என்று நம்புகிறேன். படம் வெளியாக அனைவரும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். பல தடைகளை கடந்து தான் இந்த படம் இங்கே வந்துள்ளது. சூர்யா சார் இந்தப் படத்திற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்.
இந்த படம் கண்டிப்பாக வெளியாகும். இன்று மாலை படம் வெளியாகும் என்றும், ரசிகர்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்றும் நான் நம்புகிறேன். ‘கருப்பன் வரான் வழி மறிக்காதே’ என்று சொல்கிறோம். ஆனால் பலரும் தொடர்ந்து வழி மறித்து கொண்டிருக்கிறார்கள். அந்த அனைத்து தடைகளையும் கடந்து படம் வெளியாகும். கடவுள் நம்முடன் இருக்கிறார். நல்லதே நடக்கும்” என்று கண்ணீரை அடக்கிக்கொண்டு ஆர்ஜே பாலாஜி உருக்கமாக பேசியுள்ளார்.
