தமிழில் நடிகர் அஜித் நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படத்தில் அவரது தோழியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் பாலிவுட் நடிகை பூஜா பத்ரா. அதனைத் தொடர்ந்து ‘ஒருவன்’ திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் ஜோடியாகவும் நடித்திருந்தார். அழகும், திறமையும், திரை நடிப்பிற்கான அனைத்து அம்சங்களும் இருந்தபோதிலும், தன்னால் அதிக திரைப்பட வாய்ப்புகளை பெற முடியாமல் போனதற்கான காரணத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை பூஜா பத்ரா வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
1990களில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த அவர், அந்த காலகட்டத்தில் பல முன்னணி கதாநாயகர்கள் தன்னுடன் நடிக்க விரும்பாத சூழல் இருந்ததாக கூறியுள்ளார். அதற்குக் காரணம் தனது உயரம் தான் என்றும், பல நடிகர்களை விட தன்னுடைய உயரம் அதிகமாக இருந்ததால் பல பட வாய்ப்புகள் தன் கையை விட்டு நழுவிச் சென்றதாகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “அந்த காலத்தில் நடிகைகளின் உயரம் கூட ஒரு முக்கிய விஷயமாக பார்க்கப்பட்டது. பல ஹீரோக்கள் என்னுடன் நடிக்கும்போது தயக்கம் காட்டினர். இதனால் நான் பல நல்ல வாய்ப்புகளை இழந்தேன். ஆனால் நடிகர் சல்மான் கானுடன் நடித்தபோது அவர் மிகவும் தாராளமாக நடந்துகொண்டார். நீங்கள் ஹீல்ஸ் அணிந்து கொள்ளலாம், அதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று என்னை ஊக்கப்படுத்தினார். அந்த அனுபவம் எனக்கு மிகவும் நெகிழ்ச்சியானதாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது சினிமா உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்திருப்பதாலும், படைப்பாளிகளின் எண்ணங்களில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாலும், நடிகர் மற்றும் நடிகைகளின் உயரம் போன்ற விஷயங்கள் பெரிய பிரச்னையாக பார்க்கப்படுவதில்லை என்றும் அவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
