தமிழில் நடிக்க ஆவல்… தமிழ் ரசிகர்களின் அன்பை பெற ஆசை… -நடிகை நபா நடேஷ் டாக்!

தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நபா நடேஷ், சமீபத்தில் வெளியான நாக பந்தம் திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் கவனம் பெற்றுள்ளார். விரைவில் தமிழ் திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தனது திரைப்பயணம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.அவர் கூறுகையில், “சினிமாவுக்கு வருவேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் காலம் கொடுத்த வாய்ப்பால் இன்று திரையுலகில் இருக்கிறேன். 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், நாக பந்தம் மிகவும் வித்தியாசமான படம். சனாதன தர்மம் மற்றும் வரலாற்று அம்சங்களை உள்ளடக்கிய இந்த திரைப்படம் எனக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்தது” என்றார்.

மேலும், “திரைப்படங்களை ஓடிடியில் மட்டும் பார்க்காமல், ரசிகர்கள் கட்டாயம் திரையரங்குகளுக்குச் சென்று ரசிக்க வேண்டும். தியேட்டரில் கிடைக்கும் அனுபவத்திற்கு ஈடு இணையில்லை. தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்துவிட்டேன். விரைவில் மலையாளத்திலும் நடிப்பேன். குறிப்பாக தமிழில் நடிக்க எனக்கு மிகவும் ஆசை. எனக்கு கொஞ்சம் தமிழ் பேசத் தெரியும். விரைவில் சரளமாக தமிழில் பேசி ரசிகர்களின் அன்பைப் பெறுவேன் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரை முடியாததை முடித்துக் காட்டுவதே என் பலம். எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காமல் போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் வாழ்க்கை நோக்கம். நடிகர்களை விட நடிகைகளுக்கே திரைத்துறையில் அதிக சவால்கள் உள்ளன. அவற்றை கடக்க பொறுமையும் தன்னம்பிக்கையும் மிகவும் அவசியம்” என்று கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading