ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ஹார்ட் பீட் வெப் தொடரின் மூன்றாவது சீசன் விரைவில் வெளியாகவுள்ளதாக நடிகை தீபா பாலு உறுதிப்படுத்தியுள்ளார். அனுமோல், கார்த்திக் குமார், தீபா பாலு, சாருகேஷ் எம்., சபரீஷ், யோகலட்சுமி, ஆர்.ஜி. ராம், மோகன் ராமன், அமித் பார்கவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் தொடர், இரண்டு சீசன்களாக வெற்றிகரமாக வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தீபா பாலு தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “சில பிரிவுகள் நமது நன்மைக்காகவே அமைகின்றன. என்றும் நன்றியுடன்” என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவின் இறுதியில் ‘ரீனா’ என்று கையொப்பமிட்டதுடன், ஹார்ட் பீட் தொடரையும் குறிச்சொல்லாக குறிப்பிட்டிருந்ததால், அவர் தொடரிலிருந்து விலகிவிட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இருப்பினும், அது கதாபாத்திரத்தின் சூழ்நிலையை மட்டுமே குறிப்பதாகவும், விளம்பர உத்தியாக இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் பேசிய தீபா பாலு, “ஹார்ட் பீட் தொடங்கியதிலிருந்து மூன்றாவது ஆண்டுக்குள் நுழைகிறோம். சிறிய குழுவாக ஆரம்பித்த இந்தத் தொடர் இன்று மிகப்பெரிய ரசிகர் ஆதரவைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் நேசிக்கிறார்கள். இதற்குக் காரணம் எங்களின் முழு குழுவின் உழைப்புதான். ஹார்ட் பீட் சீசன் 3 விரைவில் வெளியாகும். அதன் படப்பிடிப்புகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டன” என்று தெரிவித்துள்ளார்.
