நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள 63வது திரைப்படத்தில் மலையாள நடிகை ரியா ஷிபு இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் கதை, கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான பணிகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ள நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு நடைபெற்று வந்த நிலையில், தற்போது நடிகை ரியா ஷிபு இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெளியான ‘சர்வம் மாயா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற ரியா ஷிபு, இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
மேலும், ரியா ஷிபு என்பது விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் ரசிகர்களிடையே கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர் பணியாற்ற உள்ளார். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளார். மேலும், படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி விரைவாக நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
