ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘கருப்பு’. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். நீதிமன்ற வழக்கை மையமாக கொண்டு, அதனுடன் கடவுள் நம்பிக்கைகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான சம்பவங்களை இணைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘கருப்பு’ திரைப்படம் மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் படத்தின் விளம்பர மற்றும் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும் நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி, “கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. எங்கள் மாநிலத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் முதலமைச்சராக வர முயற்சி செய்து வந்தனர். ஆனால் உங்கள் மாநிலத்தில் ஒரே கட்சிக்குள்ளேயே பலர் முதலமைச்சராக வர முயற்சி செய்கிறார்கள். எங்களுக்கு ஒரு நல்ல முதலமைச்சர் கிடைத்திருக்கிறார். அதேபோல் உங்களுக்கும் ஒரு நல்ல முதலமைச்சர் கிடைப்பார் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
