மிகப்பெரிய ஸ்டார்கள் என்ற விளம்பர விளையாட்டை நிறுத்த வேண்டும்… நடிகை அமிஷா படேல்!

நடிகர் விஜய் நடித்த ‘புதிய கீதை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை அமிஷா படேல். அதனைத் தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்த அவர், பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தற்போது 50 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் அமிஷா படேல், தொடர்ந்து சமூக வலைதளங்கள் மற்றும் பேட்டிகள் மூலம் தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், பாலிவுட்டில் சில இளம் நடிகைகள் போலியான விளம்பரங்களின் மூலம் தங்களை சூப்பர் ஸ்டார்களாக காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள் என்று அமிஷா படேல் கடுமையாக விமர்சித்துள்ளார். சினிமாவில் உண்மையான சாதனைகளை விட, செயற்கையான பப்ளிசிட்டி மூலம் தங்களை முன்னிலைப்படுத்தும் போக்கு தற்போது நடிகர் மற்றும் நடிகைகள் மத்தியில் அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அமிஷா படேல், “பாக்ஸ் ஆபிஸில் வரலாறு படைக்கும் வகையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்களை கொடுத்திருந்தால் மட்டுமே உங்களை சூப்பர் ஸ்டார் என்று அழைத்துக்கொள்ளுங்கள். அதுவரை ‘சூப்பர் ஸ்டார்’ என்ற விளம்பர விளையாட்டை நிறுத்த வேண்டும். இது கசப்பான உண்மை என்றாலும் சொல்ல வேண்டிய நிலை உள்ளது. தங்களது திரைப்பயணத்தில் ஒரு பெரிய பிளாக்பஸ்டர் கூட கொடுக்காத பல நடிகைகள், வருடத்திற்கு இரண்டு சாதாரண திரைப்படங்களில் நடித்து, சில படப்பிடிப்பு தளங்களில் தோன்றுவதன் மூலம் தங்களை நட்சத்திரங்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். ஒரு திரைப்படம் கூட ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்யாத நடிகைகள் கூட, தங்களை நம்பர் 1, நம்பர் 2 என்று விளம்பரப்படுத்த பிஆர் குழுக்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். இது 2026-ஆம் ஆண்டு. இப்போது ரூ.100 கோடி வசூல் கூட பெரிய விஷயமாக பார்க்கப்படுவதில்லை” என்று தெரிவித்துள்ளார். அமிஷா படேலின் இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading