தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடிக்க விருப்பம்… பாலிவுட் நடிகை சாரா அலிகான் டாக்!

பாலிவுட் நடிகர் சயீப் அலிகானின் மகளாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாரா அலிகான். குடும்ப பின்னணியுடன் திரையுலகில் நுழைந்திருந்தாலும், தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ளார். இந்தி திரையுலகின் முக்கிய இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் சாரா அலிகான், ‘கேதார்நாத்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்த அவர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். குறிப்பாக நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்த ‘அத்ராங்கி ரே’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல கவனத்தை பெற்றது.

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் தென்னிந்திய சினிமா குறித்து நடிகை சாரா அலிகான் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், “பாலிவுட் சினிமாதான் எனக்கு எல்லாமே. நான் இன்று பெற்றுள்ள புகழும், அங்கீகாரமும், பெருமையும் அனைத்தும் இந்தி சினிமா மூலமாகத்தான் கிடைத்தது. ஆனால் அதே நேரத்தில், ஒரு நடிகையாக பல மொழித் திரைப்படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “குறிப்பாக தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு அதிகமாக உள்ளது. அங்குள்ள நடிகர்களின் நடிப்பு முறை, கதைகளின் அமைப்பு மற்றும் திரைப்பட உருவாக்கத்தின் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். தென்னிந்திய சினிமாவில் இருக்கும் நடிப்பு யுக்திகளையும் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். இந்திய சினிமாவில் பாலிவுட்டிற்கு அடுத்ததாக எனக்கு மிகவும் ஈர்ப்பு கொண்ட திரையுலகம் தென்னிந்திய சினிமாதான்” என்று கூறியுள்ளார். சாரா அலிகானின் இந்த கருத்துகள் தற்போது தென்னிந்திய ரசிகர்களிடையே அதிக கவனத்தை பெற்றுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading