ஹிந்தி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் நடித்த ‘தேவரா’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போது இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் ‘பெத்தி’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். கிராமப்புற விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற ஜூன் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘பெத்தி’ திரைப்படத்தில் தாம் ஏற்றுள்ள கதாபாத்திரம் குறித்து ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள தகவலில், “இந்தப் படத்தில் நான் கிராமத்து பெண்ணாக மிகவும் துள்ளலான மற்றும் உற்சாகமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கதைப்படி, இந்த படத்தில் எம்.எல்.ஏவாக நடித்திருக்கும் ராவ் ரமேஷின் மகளாக ‘அச்சியம்மா’ என்ற வேடத்தில் நான் நடித்துள்ளேன். குறிப்பாக ராம் சரணுடன் இணைந்து நடித்துள்ள ரொமான்டிக் காட்சிகளில் என் நடிப்பை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
அதனால், இந்த திரைப்படம் தெலுங்கு சினிமாவில் எனக்கென ஒரு நிலையான மார்க்கெட்டை உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது” என்று தெரிவித்துள்ளார் ஜான்வி கபூர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில் சிவராஜ்குமார், ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
