நடிகை கியாரா அத்வானி சமீபத்தில் பெண் குழந்தைக்குத் தாயானார். அவரது மகளுக்கு தற்போது சில மாதங்களே ஆன நிலையில், மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தயாராகி வருகிறார். தனது திரையுலக பயணத்தில் புதிய வெற்றிகரமான அத்தியாயத்தை தொடங்குவதற்காக அவர் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய கியாரா அத்வானி, தனது ஆரம்பகால திரையுலக போராட்டங்கள் மற்றும் தனது முதல் திரைப்படம் குறித்து நிலவி வந்த தவறான புரிதல்கள் பற்றி வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். பலரும் ‘எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ அல்லது ‘கபீர் சிங்’ திரைப்படங்கள்தான் தனது அறிமுகப்படங்கள் என்று நினைப்பதாக கூறிய அவர், உண்மையில் 2014ஆம் ஆண்டு வெளியான ‘பக்லி’ திரைப்படம்தான் தனது முதல் படம் என்று தெளிவுபடுத்தினார். ‘பக்லி’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் தனது திரையுலக வாழ்க்கையில் நீண்ட இடைவெளி ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் மீண்டும் ஆரம்பத்திலிருந்தே போராட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கியாரா கூறினார்.
மேலும், வெற்றியை அடைவதற்கு முன்பு பல ஆடிஷன்களில் கலந்து கொண்டு தொடர்ந்து நிராகரிப்புகளை சந்தித்ததாகவும், தன்னை மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். “நான் சந்தித்த கஷ்டங்கள்தான் எனக்கு மிகச்சிறந்த ஆசிரியர்களாக அமைந்தன” என்று கூறிய கியாரா அத்வானி, ஒவ்வொரு நடிகையும் தனது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு கட்டத்தில் இப்படிப்பட்ட கடினமான அனுபவங்களை கடந்து தான் முன்னேற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
