தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஸ்ரீலீலா. தெலுங்கில் அறிமுகமாகி ரசிகர்களிடையே விரைவில் பிரபலமான அவர், தற்போது தமிழ், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ரீலீலா, மாணவர்களுடன் கலந்துரையாடியபோது பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது, “வெற்றி மற்றும் தோல்வி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்டதற்கு பதிலளித்த அவர், “பயிற்சி இல்லாமல் இருப்பதற்குத்தான் நாம் பயப்பட வேண்டும்; தோல்வியை பார்த்து ஒருபோதும் பயப்படக்கூடாது. தோல்வி தான் நம்மை வெற்றியை நோக்கி கொண்டு செல்லும் முக்கியமான பாடமாக இருக்கும். மேலும், வெற்றி என்பது ஒரு இறுதி இலக்கு அல்ல; அது ஒரு நீண்ட பயணம். நீங்கள் தொடர்ந்து முன்னோக்கி சென்று கொண்டே இருந்தால், வாழ்க்கையில் பெரிய வெற்றிகளும் சிறிய விஷயங்களில் மகிழ்ச்சியும் கிடைக்கும்” என்று கூறினார்.
அதே நிகழ்ச்சியில், “வாழ்க்கையில் சோகமான சம்பவங்கள் நடந்தால் அதை எப்படி எதிர்கொள்வீர்கள்?” என்று கேட்கப்பட்டபோது, “எனக்கு வருத்தமான விஷயங்கள் நடந்தால் உடனே அழுது அந்த சோகத்தை வெளிப்படுத்தி விடுவேன். அதன் பிறகு முகத்தை கழுவிக்கொண்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்துவிடுவேன். நான் சோகமாக இருப்பதால் உலகத்தில் எதுவும் மாறப்போவதில்லை. சாலையில் நான் பார்க்கும் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனி கதைகள் இருக்கும்; அவர்களுக்கும் வலி இருக்கும், மகிழ்ச்சி இருக்கும். அதுதான் வாழ்க்கை” என்று மனதார பகிர்ந்து கொண்டார்.
மேலும், “உங்களை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கிறார்கள். எதிர்காலத்தில் அந்த நிலையை அடைய விருப்பமா? மேலும், தமிழ்நாட்டு இளைஞர்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?” என்று கேட்கப்பட்டதற்கு, “எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர் நயன்தாரா அக்கா. அவர் என்னுடைய ரோல் மாடல் போன்றவர். சென்னை பசங்கள் மிகவும் இனிமையானவர்கள். ஆனால் திருமணம் குறித்து பேச இன்னும் நிறைய காலம் இருக்கிறது” என்று சிரித்தபடி பதிலளித்தார்.
