தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா, தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இந்த கூட்டணி ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திரைப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக கொண்டு, அதனுடன் கடவுள் நம்பிக்கைகள் மற்றும் சமூக அம்சங்களை இணைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படக்குழு தற்போது புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
சமீபத்தில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி ‘கருப்பு’ திரைப்படத்தின் டிரெய்லர் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “கருப்பு திரைப்படம் மே 14-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் மிகவும் நேர்த்தியாகவும் ரசிகர்களை கவரும் வகையிலும் தயாராகியுள்ளது. தமிழகத்தில் நிலவும் அரசியல் மாற்றத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டவுடன் டிரெய்லர் வெளியிடப்படும். நல்லது நடக்கும் வரை காத்திருப்போம்” என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சூர்யா மற்றும் திரிஷா இடம்பெற்ற புதிய போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
