உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வெப் தொடர்களில் ஒன்றாக ‘மணி ஹெய்ஸ்ட்’ பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த தொடரின் 5 சீசன்கள் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியை பெற்றுள்ளன. ஒரு புரொஃபசர் தலைமையில் செயல்படும் குழு, அரசாங்கத்திற்கே சவால் விடுக்கும் வகையில் வங்கிகளில் இருந்து பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடிக்கும் கதைக்களத்தில் இந்த தொடர் உருவாகியுள்ளது. விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் இந்த தொடர் உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. மேலும், ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடரில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்றான ‘பெர்லின்’ கதாபாத்திரத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு தனி தொடர் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. தற்போது அந்த தொடரின் இரண்டாவது சீசன் வருகிற 15-ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடரின் அடுத்த சீசன் இனி உருவாகாது என முன்பு அறிவித்திருந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம், தற்போது புதிய சீசன் உருவாகி வருவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வெளியிடப்பட்ட வீடியோவில் புதிய சீசனின் சில முக்கிய காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் அடுத்த சீசனுக்கான பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக ரசிகர்கள் கருதி வருகின்றனர். இந்த புதிய சீசனில் தங்க சுரங்கங்களில் இருந்து தங்கத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு கதை நகரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, உலகளவில் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் விதம், தங்க கடத்தல் சம்பவங்கள் மற்றும் பல்வேறு நாடுகள் கையிருப்பாக வைத்திருக்கும் தங்கத்தின் பின்னணி உள்ளிட்ட அம்சங்களும் இந்த தொடரில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.
