‘LIK’ படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்காதது குறித்து மனம் திறந்த‌ இயக்குனர் விக்னேஷ் சிவன்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கிரித்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்த ‘எல்.ஐ.கே’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியது. தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடித்த திரைப்படங்கள் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வந்த நிலையில், இந்த திரைப்படம் அவருக்கு சற்றே பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. திரைப்படம் ரூ.70 கோடி வரை வசூல் செய்திருந்தாலும், அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “நான் ஒரு கனவுடன் வந்தேன். அது சிறிய கனவும் அல்ல, பாதுகாப்பான கனவும் அல்ல. முழுமையான நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்ட ஒரு கனவு. இந்தக் கதை கோடிக்கணக்கான மக்களிடம் சென்று சேரும் என்றும், திரையரங்குகளை அதிர வைக்கும் என்றும் நம்பினேன். ரசிகர்களின் கைதட்டல்களை நான் கற்பனை செய்தேன். அந்த கைதட்டல்களை திரையரங்குகளில் நேரடியாகவும் கண்டேன். சிரிப்பை உருவாக்க நினைத்தேன், அதையும் ரசிகர்களிடமிருந்து கேட்டேன். ஆனால் இன்னும் 100 கோடி என்ற இலக்கை எட்ட முடியவில்லை. உண்மையாகச் சொன்னால், அதைவிட இரு மடங்கு வசூலை நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் எங்கோ ஏதோ ஒன்று சரியாக அமையவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது பதிவில், “இறுதி முடிவு குறித்து சற்று வருத்தம் இருந்தாலும், நான் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கிறேன். ஏனெனில் இந்த திரைப்படம் வெளியாகியதே எனக்கு ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியை போன்ற உணர்வை கொடுக்கிறது. நான் மிகவும் மதித்தவர்களிடமிருந்து பாராட்டுகள் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வாழ்க்கை வேறு விதமான அனுபவத்தை கொடுத்தது. கலவையான விமர்சனங்கள், மிதமான பாராட்டுகள் மற்றும் பல கேள்விகள் இருந்தபோதிலும், நான் இன்னும் உறுதியாக நிற்கிறேன். இந்த திரைப்படத்திற்குப் பின்னால் எண்ணற்ற போராட்டங்கள் இருந்தன. தூக்கமில்லா இரவுகள், சொல்ல முடியாத அச்சங்கள், நான் மட்டுமே உணர்ந்த பல தடைகள் இருந்தன. 70 கோடி வசூல் என்பது மிகப்பெரிய சாதனையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது உண்மையானதும், கடின உழைப்பின் மூலம் சம்பாதிக்கப்பட்டதுமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading