நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும், இந்த திரைப்படம் உலகளவில் ரூ.600 கோடி வரை வசூல் செய்ததாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
‘ஜெயிலர்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகரான மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். இப்படம் வரும் ஜூன் மாதத்தில் திரைக்கு வரலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், இப்படத்தில் ஷாருக்கான் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தற்போது தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் நடித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.160 கோடிக்கு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அதே நிறுவனம் ரூ.100 கோடிக்கு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் முதல் பாடல் வரும் ஜூன் மாதத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு பணியாற்றி வருகின்றனர்.
