புதுமுக இயக்குநர்களின் திரைப்படங்களை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் சசிகுமார், அந்த முயற்சி குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், “கடவுள் எனக்கு அப்படி ஒரு கொடுப்பினையை கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ஒருவரின் திறமையை கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுக்க உதவியாக இருப்பது எனக்கு மிகப்பெரிய பெருமையாக இருக்கிறது. எல்லோருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘மை லார்ட்’ திரைப்படத்திற்கு பிறகு, தற்போது பல புதிய படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் அவர் பிஸியாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ‘எவிடென்ஸ் நாநா’, மீண்டும் ராஜூமுருகனின் புதிய படம் மற்றும் ‘வதந்தி 2’ வெப்சீரிஸ் உள்ளிட்ட பல திட்டங்களில் அவர் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, ‘காவல் துறை உங்கள் நண்பன்’ திரைப்படத்தை இயக்கிய ஆர்.டி.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எவிடென்ஸ் #8’ திரைப்படத்திலும் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குடும்ப பின்னணியுடன் கூடிய கிரைம் டிராமாவாக உருவாகும் இந்த திரைப்படத்தில், சசிகுமார் ஒரு வெட்டிங் போட்டோகிராபராக நடித்திருக்கிறார். மேலும், அவரது தந்தை கதாபாத்திரத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பின்னணி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், ‘லீலை’ மற்றும் ‘கொலைக்காரன்’ திரைப்படங்களை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இதற்கு முன்பு ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கிய ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப்சீரிஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘வதந்தி 2’ வெப்சீரிஸை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார். இதில் சசிகுமார் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு வெளியான இதன் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த வெப்சீரிஸ் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்’ திரைப்படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கத்தில் ‘நா நா’ என்ற திரைப்படத்திலும் சசிகுமார் நடித்துள்ளார். இதில் சரத்குமாரும் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் குறித்து இயக்குநர் பேசுகையில், “ஒரு கடைக்கோடி கிராமத்தில் வாழும் சாதாரண மனிதனை இந்த சமூகம் எப்படி மாற்றுகிறது என்பதுதான் படத்தின் மையக்கரு. சசிகுமார் நடித்துள்ள கதாபாத்திரத்தின் பெயர் நா. நாராயணன். அதனால்தான் சுருக்கமாக ‘நா நா’ என்று தலைப்பு வைத்துள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார். இப்படமும் தற்போது ரிலீஸுக்காக காத்திருக்கிறது.
இந்நிலையில், அறிமுக இயக்குநர் பாலா அரண் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திலும் சசிகுமார் நடித்து முடித்துள்ளார். இதில் பாலாஜி சக்திவேல், சண்முகராஜன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புதுமுக நடிகை அம்ருதா இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மலையாளத்தில் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ள அம்ருதாவுக்கு இது முதல் தமிழ் திரைப்படமாகும்.
இதைத்தவிர மீண்டும் ராஜூமுருகன் இயக்கத்தில் நடிக்கவும் சசிகுமார் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் திரைக்கதை பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ‘மை லார்ட்’ திரைப்படத்தைப் போலவே, இந்த படமும் சமூக அக்கறை கொண்ட கதைக்களத்துடன் உருவாகும் என கூறப்படுகிறது.
அதேபோல், ஊரக உள்ளாட்சிகளில் தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் எதிர்கொள்ளும் தீண்டாமை மற்றும் சமூக வலிகளை மையமாக வைத்து ‘நந்தன்’ திரைப்படத்தை இயக்கிய இரா. சரவணன் இயக்கத்திலும் சசிகுமார் நடிக்க தயாராகி வருகிறார். இதற்கு முன்பு இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நாவலை படித்த சசிகுமார், அதன் வெளியீட்டு விழாவில் அந்த நாவலின் மார்ட்டின் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
மேலும், நடிகராக மட்டுமின்றி மீண்டும் இயக்குநராகவும் களமிறங்க சசிகுமார் திட்டமிட்டு வருகிறார். வரலாற்று கதைகள் மற்றும் நாவல்களை விரும்பி படிக்கும் அவர், அடுத்ததாக ஒரு பீரியட் திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும், அதற்கான பணிகள் மறுபக்கம் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
