இயக்குநர் அஷுதோஷ் கவுரிக்கர் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், நடிகர் அமீர்கான் மற்றும் கிரேஸி சிங் உள்ளிட்டோர் நடித்த ‘லகான்’ திரைப்படம் 2001ஆம் ஆண்டு வெளியாகி இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாக அமைந்தது. 1893ஆம் ஆண்டு காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவான இந்த பீரியட் திரைப்படம், கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தாலும், அதில் தேசபற்று, தன்னம்பிக்கை மற்றும் ஒற்றுமை போன்ற அம்சங்கள் மிகவும் வலுவாக சொல்லப்பட்டிருந்தன. இதனால் ‘லகான்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், ஹிந்தி சினிமாவில் காலத்தால் மறக்க முடியாத படைப்பாகவும் மாறியது.
இந்த நிலையில், சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் அஷுதோஷ் கவுரிக்கர், நடிகர் அமீர்கான் கூட்டணியில் புதிய திரைப்படம் ஒன்று உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் தற்போது பாலிவுட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய திரைப்படம், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற லாலா அமர்நாத் வாழ்க்கையை மையமாகக் கொண்ட பயோபிக் திரைப்படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய ஆல்-ரவுண்டராக விளங்கிய மொகிந்தர் அமர்நாதின் தந்தையான லாலா அமர்நாத், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றவர்.
1933ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய லாலா அமர்நாத், தனது முதல் தொடரிலேயே சதமடித்து வரலாறு படைத்தார். அவரது வாழ்க்கைப் பயணத்தையும், இந்திய கிரிக்கெட்டில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தையும் மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகும் என கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்றும், விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘லகான்’ கூட்டணி மீண்டும் இணையவுள்ளதால், இந்த புதிய பயோபிக் திரைப்படம் ரசிகர்களிடையே தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
