தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் விளையாட்டை மையப்படுத்திய கதையில் நடிக்கும் சிவகார்த்திகேயன்? வெளியான புது அப்டேட்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு, கிராமத்து தெய்வங்களை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். அந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு, ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் அவர் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படம் விளையாட்டு பின்னணியில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழரசன் பச்சமுத்து இயக்கிய ‘லப்பர் பந்து’ திரைப்படமும் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனும் ‘கனா’ திரைப்படத்தில் விளையாட்டு பின்னணியில் நடித்திருந்தார். தற்போது இந்த இருவரும் இணைவதன் மூலம் மீண்டும் ஒரு விளையாட்டு சார்ந்த திரைப்படம் உருவாக உள்ளது. இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, நடிகர் தனுஷின் 56வது திரைப்பட பணிகளில் பிஸியாக உள்ளார். அந்தப் பணிகளை முடித்தவுடன் சிவகார்த்திகேயன் திரைப்பட பணிகளில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading