இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான ‘பூ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி. தனது இயல்பான நடிப்பு மற்றும் கதாபாத்திர தேர்வுகளின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், அதன் பின்னர் ‘சென்னையில் ஒரு நாள்’, ‘மரியான்’, ‘பெங்களூர் நாட்கள்’, ‘தங்கலான்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் மூன்று திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், திரைப்படங்களில் நடிகைகளை தொடர்ந்து ஹீரோவின் காதலி கதாபாத்திரங்களுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தி பயன்படுத்தும் நிலை குறித்து பார்வதி தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில், “நான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த முதல் ஏழு ஆண்டுகளிலும் எனக்கு வந்த கதைகள் அனைத்தும் காதல் கதைகளாகத்தான் இருந்தன. ஒவ்வொரு படத்திலும் ஹீரோவுடன் டூயட் பாடி நடிப்பது ஒரு கட்டத்தில் எனக்கு சலிப்பை ஏற்படுத்தியது. நடிகைகள் என்றாலே காதலிக்கும் கதாபாத்திரங்களுக்கு மட்டுமே பொருத்தமானவர்கள் என்று நினைப்பது முற்றிலும் தவறான மனநிலை,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “எங்களைப் போன்ற நடிகைகளாலும் சமூக அக்கறை கொண்ட கதாபாத்திரங்களில் மிகவும் சிறப்பாக நடிக்க முடியும். அதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதன் பிறகு வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினேன்,” என்று கூறியுள்ளார்.
திரையுலகில் ஆண், பெண் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது என்றும் பார்வதி வலியுறுத்தியுள்ளார். “ஆண்களின் பிரச்சனை, பெண்களின் பிரச்சனை என்று தனித்தனியாக பார்க்காமல், மனிதர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதைகளாக இயக்குநர்கள் உருவாக்க வேண்டும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை ஒரு சமூக பிரச்சனையாகவே பார்க்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “பெண்களின் திறமையை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஆண்களுக்கு இணையாக பெண்களாலும் எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்து காட்ட முடியும்,” என்று பார்வதி தனது கருத்தை தெளிவாக பதிவு செய்துள்ளார்.
