‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற நடிகை ரம்யா ரங்கநாதன், தற்போது தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ‘மீசைய முறுக்கு 2’, ‘ஜமா’ மற்றும் பாரி இளவழகன் இயக்கும் ‘அன்பே டயானா’ உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரம்யா ரங்கநாதன் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “நான் ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் மிகப்பெரிய ரசிகை. அந்த படத்தில் இடம்பெற்ற ‘வாடி புள்ள வாடி’ பாடல் ஒலித்தபோது நான் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டேன். தற்போது அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் நான் ஒரு தமிழ் பெண்ணாக நடிக்கிறேன். அதே சமயம் ‘அன்பே டயானா’ திரைப்படத்தில் ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்துவருகிறேன். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த கதாபாத்திரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க நான் விரும்பவில்லை. ஒரு கலைஞராக எனக்கு சவாலாகவும் மதிப்புள்ளதாகவும் இருக்கும் கதாபாத்திரங்களையே நான் தேர்வு செய்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
‘அன்பே டயானா’ திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரத்திற்காக பெரம்பூரை சேர்ந்த ஆங்கிலோ இந்தியர்களுடன் நேரடியாக கலந்துரையாடி, அவர்களின் உடல்மொழி மற்றும் வாழ்க்கை முறைகளை கவனித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். “நான் சென்னையை சேர்ந்தவளாக இருந்தாலும், இதற்கு முன்பு பெரம்பூரை நேரில் பார்த்ததில்லை. அங்கு சென்றபோது அது எனக்கு முற்றிலும் வேறொரு நகரமாக தோன்றியது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
