‘இருமுகன்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாக ஏற்கனவே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்பிறகு படத்தைப் பற்றிய எந்த புதிய தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘சியான் 63’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்திற்காக நடிகர் விக்ரம் சுமார் 50 முதல் 60 நாட்கள் வரை தனது கால்ஷீட்டை ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படத்தின் மூலம் ரியா ஷிபு தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். அவர் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தாலும், கதாநாயகியாக இல்லையென கூறப்படுகிறது. இவருடன் நடிகை ஊர்வசி மற்றும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.
