நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய நடிகர் சந்தானம், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து கதாநாயகனாக நடித்துவருகிறார். தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பு மற்றும் வசனங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர், தற்போது முழுநீள ஹீரோ கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
கடைசியாக சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகியது. அதன் பின்னர் ஒரு வருடத்திற்கும் மேலாக அவரது அடுத்த திரைப்படம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சிம்பு நடித்துவரும் சில திரைப்படங்களில் சந்தானம் மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானாலும், அவை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.
இந்நிலையில், தற்போது சந்தானம் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்திற்கு ‘லவ் பைட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் சதீஷை வைத்து ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தின் முதல் போஸ்டரைப் பார்க்கும்போது, இது காதல், நகைச்சுவை, திகில் மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த திரைப்படமாக உருவாகி வருவதாக தெரிகிறது. சந்தானத்தின் வழக்கமான நகைச்சுவை பாணியுடன், புதிய வகை திரைக்கதையையும் இணைத்து இந்த திரைப்படம் உருவாகி வருவதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
