தனது இளமையின் ரகசியத்தை பகிர்ந்த நடிகை பூமிகா சாவ்லா!

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் தனது இயல்பான மற்றும் தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்தவர் நடிகை பூமிகா சாவ்லா. கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், மிகக் குறுகிய காலத்திலேயே தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார்.

தமிழில் நடிகர் விஜய்யுடன் நடித்த ‘பத்ரி’ திரைப்படம் பூமிகா சாவ்லாவின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, சூர்யாவுடன் ‘சில்லுனு ஒரு காதல்’ மற்றும் ‘ரோஜா கூட்டம்’ போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்த அவர், பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் கவனம் செலுத்தி தனது நடிப்பு திறனை மேலும் நிரூபித்தார். குறிப்பாக, ‘எம்.எஸ். தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ திரைப்படத்தில் தோனியின் அக்காவாக நடித்த அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் பங்கேற்ற பூமிகா சாவ்லா, தனது 47 வயதிலும் இளமையையும் அழகையும் பராமரித்து வருவதற்கான ரகசியங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறுகையில், “நான் எந்த உணவை சாப்பிட்டாலும் அதை அளவோடு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். குறிப்பாக வீட்டில் சமைக்கப்படும் சைவ உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிடுவேன்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், குறைவான கார உணவுகள், அதிக அளவில் தண்ணீர் குடிப்பது மற்றும் பழங்களை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வது தனது சருமத்திற்கு இயல்பான பொலிவை தருவதாகவும் அவர் கூறியுள்ளார். “மனம் அமைதியாக இருந்தால் மட்டுமே உடலும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். அதற்காக நான் தினமும் யோகா செய்து வருகிறேன். உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க நீச்சல் மற்றும் நடைப்பயிற்சியை ஒருபோதும் தவறவிடுவதில்லை,” என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், சரியான தூக்கம் இல்லாதபோது மனதில் எரிச்சல் உருவாகும் என்றும், அடிக்கடி பயணம் செய்வதும் புத்தகங்கள் வாசிப்பதும் தனக்கு மனநிறைவை அளிப்பதாகவும் பூமிகா கூறியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் அதிகம் கவனம் செலுத்திய அவர், ‘MCA’ (மிடில் கிளாஸ் அபாயி) திரைப்படத்தில் நடித்த ‘வதினம்மா’ கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். சமீபத்தில் வெளியான ‘யூபோரியா’ திரைப்படத்திலும் நடித்த அவர் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading