மக்களின் முடிவை நாம் ஏற்கவேண்டும்… தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த இயக்குநர் திருச்செல்வம்!

தமிழக சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தவெகவிற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்கியுள்ள நிலையில், தற்போது அந்தக் கூட்டணியின் மொத்த பலம் 112 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் இன்னும் கிடைக்காததால் அரசியல் சூழ்நிலை பரபரப்பாக உள்ளது.

இந்நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தவெக தலைவர் விஜய் ஆளுநர் அர்லேகரை சந்தித்தார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைப்பு வழங்க முடியாது என்று ஆளுநர் தெளிவாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மீதமுள்ள 6 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவிற்காக விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

அவர்கள் இன்று முக்கிய முடிவை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கிடையில், விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் திருச்செல்வமும் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: “வணக்கம்… தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். அவரை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க முயற்சிப்பது ஜனநாயக மரபுக்கு எதிரானது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அதைத் தடுப்பது தவறான செயல். அவர் தனது செல்வாக்கை சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டியது அவசியம். அதற்கான வாய்ப்பையும் நேரத்தையும் வழங்க வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகம். பெரும்பான்மையான மக்கள் அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். மற்ற கட்சிகள் எதிர்க்கட்சிகளாக அமர்ந்து அவரது செயல்பாடுகளில் குறை இருந்தால் விமர்சிக்கலாம். அவர் சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால் அடுத்த தேர்தலில் மக்கள் அதற்கான பதிலை வழங்குவார்கள். வெற்றி பெற்ற ஒருவருக்கு தோல்வி வழங்கப்படுவது ஜனநாயக மரபாக இருக்க முடியாது,” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading