தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடன அமைப்பாளர்களான ராஜூ சுந்தரம் மற்றும் பிரபுதேவாவின் நடனக் குழுவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் டான்சர் ஜப்பான் குமார், தனது தனித்துவமான நகைச்சுவை கலந்த நடன பாணியின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர். பல முன்னணி நடிகர்களின் பாடல்களில் நடனமாடியுள்ள அவர், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சமீப காலமாக சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், சென்னை நகரில் ஜப்பான் குமார் சொந்தமாக ஓட்டல் தொடங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் வைரலாக பரவி வந்தன. குறிப்பாக ஒரு சிறிய உணவகத்தில் ஜப்பான் குமார் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் காட்சிகளும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டன.
இந்த தகவல் குறித்து ஜப்பான் குமாரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “அந்த வீடியோக்களை நானும் பார்த்தேன். ஆனால் அதில் பரவிவரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. சென்னை கமலா தியேட்டர் அருகே அந்த ஓட்டல் இருப்பது உண்மை. அந்த இடத்தில் நானும் இருப்பதும் உண்மைதான். ஆனால் அந்த ஓட்டல் என்னுடையது அல்ல. அது என்னுடைய தம்பி சூரிக்கு சொந்தமானது. நான் ஓய்வாக இருக்கும் நேரங்களில் அங்கே சென்று உதவி செய்வேன். அதை பார்த்த சிலர் தவறாக புரிந்துகொண்டு அது என்னுடைய ஓட்டல் என்று பரப்பி விட்டனர். நான் தற்போது கூட சினிமாவில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். வழக்கம்போல் பல திரைப்படங்களில் டான்சராக நடனமாடி வருகிறேன்,” என்று விளக்கம் அளித்துள்ளார்.
