கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நடித்து பான் இந்திய நடிகையாக உயர்ந்துள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதல் திருமணம் செய்துக்கொண்ட அவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் ‘ரணபலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
தற்போது இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகி வரும் ‘மைசா’ திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா அதிரடி நிறைந்த போர்வீராங்கனை கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்த திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அன்பார்முலா பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்தில் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் ‘புஷ்பா 2’ படத்தின் வில்லனாக கவனம் பெற்ற தாரக் பொன்னப்பாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேஜிஎப் மற்றும் தேவரா போன்ற படங்கள் மூலம் கவனம் பெற்ற அவர், ‘புஷ்பா 2’ திரைப்படத்தில் தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருந்தார். ராஷ்மிகாவுடன் அவர் இணையும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும்.
கோண்ட் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் அவர்களின் உலகத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தில் ராஷ்மிகாவின் தோற்றம் ரசிகர்களிடம் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்திற்காக சாகச காட்சிகளில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக ராஷ்மிகா மந்தனா தாய்லாந்தில் சிறப்பு பயிற்சியும் பெற்றுள்ளார். குறிப்பாக பேங்காக்கில் தினமும் எட்டு மணி நேரத்திற்கு மேல் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. அந்த பயிற்சி புகைப்படங்களும் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்நிலையில், ‘மைசா’ திரைப்படத்தின் முக்கிய ஆக்ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்றது. தற்போது அந்த படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். “கேரளாவில் நடைபெற்ற ‘மைசா’ திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டோம். இந்தப் பயணத்தை சாத்தியமாக்க கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி, ஆக்சன் காட்சிகள் உங்களை நிச்சயம் கவரும் என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
