தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ள நடிகை சிம்ரன், தற்போது வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பல வருடங்களாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள அவர், சமீபத்தில் பாலிவுட் சினிமா குறித்த தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அவரது இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சிம்ரன் பேசுகையில், “இந்தி திரைப்படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்திருந்தாலும், நான் அவற்றில் பலவற்றை ஏற்காமல் மறுத்துவிட்டேன். காரணம், அங்கிருக்கும் சிலரின் மனநிலையுடன் என்னால் ஒன்றிணைந்து இயங்க முடியவில்லை. தென்னிந்திய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பல ஆண்டுகளாக சாதித்து வந்தாலும், அவர்களின் பாரம்பரியம் மற்றும் சாதனைகளுக்கு பாலிவுட்டில் உரிய மரியாதை கிடைப்பதில்லை. அந்த விஷயம் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
என் வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தை நான் சினிமாவிற்காக அர்ப்பணித்திருக்கிறேன். அப்படியிருக்க, ஒரு நடிகையாக எனக்கு கிடைக்க வேண்டிய மரியாதை வழங்கப்படவில்லை என்ற உணர்வு சில நேரங்களில் வேதனையை தருகிறது. சில தயாரிப்பு நிறுவனங்கள் அடிப்படை வசதிகளுக்காக கூட பேரம் பேசும் சூழல் உள்ளது. ஓட்டல் வசதி முதல் பயணச்சீட்டு வரை பல விஷயங்களில் தேவையற்ற பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. அந்த அனுபவங்கள் என்னை மிகவும் பாதித்தன. அதனால்தான் நான் இந்தி படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்பவில்லை.
ஆனால் சமீபத்தில் சன்னி தியோலுடன் ‘கப்ரு’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் மிகவும் நல்லதாக இருந்தது. அந்த படத்தில் எந்தவித சிரமமும் அல்லது மரியாதைக்குறைவும் எனக்கு ஏற்படவில்லை. எல்லோரும் இப்படிப் புரிந்துணர்வுடன் நடந்துகொண்டால், எந்த மொழி திரைப்படத்திலும் பணியாற்ற மகிழ்ச்சியாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
