விரைவில் வெளியாகிறதா ஜனநாயகன் திரைப்படம்? கேவிஎன் தயாரிப்பாளர் கொடுத்த முக்கிய அப்டேட்!

தமிழகத்தின் முதலமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட நடிகர் விஜய் நடித்த கடைசி திரைப்படம் ‘ஜனநாயகன்’. இயக்குநர் வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை கேவிஎன் நிறுவனம் சார்பில் கே.வி.நாராயணன் தயாரித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அரசியல் மற்றும் திரையுலக ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் தணிக்கை சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள் காரணமாக அப்போது திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதனை தொடர்ந்து ரிவைசிங் கமிட்டி இந்த திரைப்படத்தை பார்த்ததாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், தற்போது வரை இந்த திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என்ற தகவலே வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் தமிழக ஆளுநரை சந்தித்தபோது, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் கேவிஎன் வெங்கட் நாராயணனும் அவருடன் சென்றிருந்தது பேசுபொருளாக மாறியது. அதேபோல், நேற்று நடைபெற்ற விஜய்யின் பதவியேற்பு விழாவிலும் அவர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து கேள்வி எழுப்பியபோது, “இப்போது ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஹீரோ முதலமைச்சராகிவிட்டார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும். தணிக்கை சான்றிதழ் கிடைத்தவுடன் படம் திரைக்கு வரும். தணிக்கை வாரியத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்னும் இரண்டு வாரங்களில் திரைப்படம் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார். இதனால், இந்த திரைப்படம் மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading