1950 மற்றும் 1960-களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சாவித்ரி. தனது சிறப்பான நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தை பிடித்த அவர், 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் சொந்தமாக திரைப்படங்களை தயாரித்ததால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தனது சொத்துக்களை இழந்த சாவித்ரி, வெறும் 46 வயதிலேயே மிகவும் பரிதாபமான நிலையில் உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாறு பின்னர் தமிழில் ‘நடிகையர் திலகம்’ மற்றும் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயர்களில் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார். மேலும், சமந்தா, பிரகாஷ் ராஜ், நாக சைதன்யா, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கிய ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக, சாவித்ரியின் வாழ்க்கையை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்திய விதம் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த திரைப்படம் வெளியாகி தற்போது 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், “எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான திரைப்படம் என்றால் அது நிச்சயமாக ‘நடிகையர் திலகம்’ தான். அந்த திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதும் சவாலானதுமாக இருந்தது. அந்த கதாபாத்திரத்தில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. உணர்வுப்பூர்வமாகவும் மனதளவிலும் நான் முழுமையாக அதில் அர்ப்பணித்துக்கொண்டேன். ஒரு கட்டத்தில் அந்த கதாபாத்திரத்தில் முழுமையாக மூழ்கி, என்னையே அதில் தொலைத்துவிட்டேன் என்ற உணர்வு ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
