பிரபாஸுடன் ‘ஆதிபுருஷ்’ மற்றும் தனுஷுடன் ‘தேரே இஷ்க் மேய்ன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன். தற்போது ஹிந்தியில் உருவாகியுள்ள ‘காக்டெய்ல் 2’ திரைப்படத்தில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவருடன் மற்றொரு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஜூன் 19-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, படத்தின் புரமோஷன் பணிகளுக்காக பல்வேறு ஊடகங்களுக்கு நடிகை கிரித்தி சனோன் பேட்டியளித்து வருகிறார்.
அப்படியான ஒரு பேட்டியில் பேசிய கிரித்தி சனோன், “சினிமாவில் எந்தவித பின்னணியும் இல்லாமல் நான் இந்த துறைக்குள் வந்தேன். ஆரம்ப காலங்களில் பட வாய்ப்புகளுக்காக மிகவும் கஷ்டப்பட்டேன். ‘மிமி’ போன்ற திரைப்படங்கள் எனக்கு அங்கீகாரம் கிடைக்கச் செய்வதற்கு முன்பு பலமுறை விரக்தியான சூழ்நிலைகளை சந்திக்க நேரிட்டது. குறிப்பாக பல திரைப்படங்களில் இறுதிக்கட்டம் வரை நான் தேர்வு செய்யப்பட்டிருந்தும், பின்னர் அந்த வாய்ப்புகள் நட்சத்திர வாரிசுகளுக்கு சென்றுவிட்டன” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “எனக்கு எந்த விஷயமும் எளிதாக கிடைக்கவில்லை. ஒவ்வொரு வாய்ப்பையும் நான் போராடியே பெற்றேன். சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் அல்லாத காரணத்தால், எதிர்காலம் குறித்த ஒரு நிச்சயமற்ற நிலையுடனே நான் தொடர்ந்து பயணிக்க வேண்டியிருந்தது. அதேபோல், என்னுடைய சில திரைப்படங்கள் தோல்வியடைந்தபோது நான் மிகவும் சோர்ந்து போனேன். ஆனால் அந்த தோல்விகள்தான் எந்த மாதிரியான கதைகளை தேர்வு செய்ய வேண்டும் என்ற தெளிவை எனக்கு கொடுத்தது” என்றும் தெரிவித்துள்ளார்.
