இயக்குநர் ராஜீவ் மேனன் சமீபத்தில் மலையாளத்தில் அளித்த பேட்டியில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “இயக்குநர் நெல்சன் எனக்கு தொலைபேசியில் அழைத்து இந்தப் படம் குறித்து பேசினார். அவர் கதையை விவரிக்கும் விதம் மிகவும் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையுடனும் இருந்தது. முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல், அமைதியாகவும் சிரிப்பை வரவழைக்கும் விதமாகவும் அவர் கதை சொல்லும் பாணி மிகவும் தனித்துவமானது.
அவர் கதையை முழுமையாக விளக்கிய பின், ‘சார், இந்தப் படத்திற்கு நீங்கள் ஒளிப்பதிவு செய்கிறீர்களா?’ என்று கேட்டார். அதற்கு நான் உடனடியாக ‘நிச்சயமாக செய்கிறேன், இந்தக் கதையின் கருத்து எனக்கு மிகவும் பிடித்துள்ளது’ என்று சம்மதம் தெரிவித்தேன். நெல்சன் அழைத்த ஒரு வாரத்திலேயே புரோமோ படப்பிடிப்பிற்கு வரச் சொன்னார். அப்போது படத்தின் நாயகர்கள் யார் என்பது குறித்து ஒரு சிறிய குறிப்பை மட்டுமே அளித்திருந்தார்.
நான் கமல்ஹாசனுடன் முன்பே விளம்பரப் படங்களில் பணியாற்றியுள்ளேன். ஆனால், ரஜினிகாந்துக்கு ஒளிப்பதிவு செய்வது இதுவே எனக்கு முதல்முறையாகும். அந்த புரோமோ படப்பிடிப்பு அனுபவம் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்தது. குறிப்பாக, இரண்டு பெரிய சூப்பர் ஸ்டார்களின் அந்தஸ்தை ஒதுக்கி வைத்து, அவர்களை சாதாரண மனிதர்களாக காட்டிய நெல்சனின் யோசனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இந்தக் கதை இன்றைய இளைஞர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், என் நீண்டகால திரைப் பயணத்தில் நான் செய்த பணிகளுக்கு கிடைக்காத அளவிற்கு, இந்தப் படத்தின் புரோமோ வெளியான பிறகு எனக்கு பாராட்டுகள் கிடைத்தன. தற்போது ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தங்களது பிற பணிகளில் பிஸியாக இருப்பதால், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
