தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட தவெக தலைவர் விஜய், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த வெற்றியைத் தொடர்ந்து அரசியல் தலைவர்களும், திரைத்துறை பிரபலங்களும் அவருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
கேவிஎன் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் வெங்கட் கே நாராயணா தனது சமூக வலைத்தளப் பதிவில், “அனைத்து தடைகளையும் தாண்டி வெற்றி பெற்ற ஜனநாயகன் தளபதி விஜய் அவர்களுக்கு எங்களது இதயம் கனிந்த வாழ்த்துகள். இது ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான அடையாளம்; வரும் தலைமுறைகளிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கைச் சிக்கல்களின் காரணமாக வெளியீடு தாமதமான நிலையில், சில வாரங்களுக்கு முன்பு இணையத்தில் கசிந்தது. இதனால் படத்தின் வணிக நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட தயாரிப்பு நிறுவனம் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
