தெலுங்குத் திரையுலகில் ‘மா ஊரி பொலிமேரா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றவர் நடிகை காமாக்சி பாஸ்கர்லா. அந்த திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. அதன்பிறகு கதாநாயகி மற்றும் குணச்சித்திர வேடங்களில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். ‘இட்லு மாரேடுமில்லி ப்ரஜானீகம்’, ‘ரவுடி பாய்ஸ்’, ‘விருபாக்சா’, ‘மிக்ஸ் அப்’, ‘ஓம் பீம் புஷ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் அவரது நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் அதிவி சேஷ் நடித்த ‘டகோயிட்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது ‘அகதா’ மற்றும் ‘மா ஊரி பொலிமேரா 3’ போன்ற பெரிய திரைப்படங்கள் கைவசம் உள்ள சூழலில், நடிகை காமாக்சி பாஸ்கர்லா திடீரென எடுத்துள்ள முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் திரைப்படங்களில் இருந்து தற்காலிக ஓய்வு எடுக்க இருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சினிமா அல்லது நடிப்பு மீது சலிப்பு ஏற்பட்டதனால் இந்த முடிவை எடுக்கவில்லை. உடல் மற்றும் மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த கடினமான முடிவை எடுத்துள்ளேன். சில சமயங்களில் நமது இலக்கை அடைய ஒரு படி பின்வாங்குவதும் அவசியமாகிறது. நான் எங்கும் செல்லவில்லை. விரைவில் மீண்டும் உங்களிடம் திரும்பி வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.
