மறைந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி உடலுக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் நேரில் அஞ்சலி!

ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் பிரபல தயாரிப்பாளரும் ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் தலைவருமான ஆர்.பி. சவுத்ரி உயிரிழந்த சம்பவம் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவு குறித்து பல்வேறு திரைப்பிரபலங்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துவரும் நிலையில், மறைந்த தயாரிப்பாளர் சவுத்ரியின் உடல் இன்று சென்னை கொண்டு வரப்பட்டது.

அவரது மகனும் நடிகருமான ஜீவாவின் தி.நகர் இல்லத்திற்கு முதலில் அவரநு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு நடிகர்கள் விஷால், கார்த்தி உள்ளிட்ட பல திரையுலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் மயிலாப்பூரில் உள்ள சவுத்ரியின் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உடல் வைக்கப்பட்டது. அங்கு நடிகர்கள் விக்ரம், தனுஷ், சூர்யா, சூரி, கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், உள்ளிட்ட பலரும் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மோகன்லால் உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயும் நேரில் சென்று ஆர்.பி. சவுத்ரியின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ள இந்த சூழலில் தனது திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையை அளித்த தயாரிப்பாளருக்கு இறுதி மரியாதை செலுத்த விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது நடிகர் ஜீவா விஜய்யை பார்த்ததும் கண்கலங்கி அழுதார். தவெக தலைவர் விஜய் ஜீவாவை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading