நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் மே 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு, படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கேரளாவில் நடைபெற்றது.
பிரபல மலையாள குணச்சித்திர நடிகரும், தேசிய விருது பெற்றவருமான இந்திரன்ஸ், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கருப்பு’ திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு திரும்பியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சூர்யா, நடிகர் இந்திரன்ஸ் குறித்து உணர்ச்சியுடன் பேசும்போது, “இந்திரன்ஸ் அவர்கள் சினிமாவில் எத்தனை உருவ கேலிகளையும் தாண்டி இந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்பதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்காக எனக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்ட அதே நாளில், ‘ஹோம்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கும் சிறப்பு ஜூரி தேசிய விருது வழங்கப்பட்டது. தன்னை நோக்கி வந்த உருவகேலி உள்ளிட்ட அனைத்து விமர்சனங்களையும் தாண்டி, இன்று தனித்துவமான நடிப்பின் மூலம் முன்னேறியுள்ள இவர் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம்” என்று கூறியுள்ளார்.
