இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை உலகளாவிய அளவில் பிரபலப்படுத்தும் முயற்சிகளும் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன. அதற்காக படப்பிடிப்பு தளங்களையும், திரைக்குப் பின்னால் நடைபெறும் தயாரிப்பு பணிகளையும் காண பல்வேறு சர்வதேச பத்திரிகையாளர்கள் ஐதராபாத்திற்கு அழைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், படத்தின் விளம்பர பணிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக சர்வதேச திரைப்பட விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பயன்படுத்த ராஜமவுலி தொடங்கியுள்ளார். சமீபத்தில் மெக்சிகோவில் நடைபெற்ற ஒரு திரைப்பட நிகழ்வில் ‘வாரணாசி’ திரைப்படத்தின் சில காட்சிகள் திரையிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தை பிரான்சிலும் அறிமுகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வரும் ஜூன் மாத இறுதியில் பிரான்சில் ‘வாரணாசி’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. காலப் பயணத்தையும் ராமாயணக் கதையையும் இணைத்து உலகம் முழுவதும் சுற்றிப் பயணிக்கும் சாகசத் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. இதில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமாரன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
