மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார், அதன் பின்னர் அமலா பால் நடித்த ‘ஆடை’, சந்தானம் நடித்த ‘குலு குலு’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். அதேசமயம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’, ‘லியோ’, கமல் நடித்த ‘விக்ரம்’, ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதையமைப்பில் பணியாற்றியுள்ளார். தற்போது விது மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ள ‘29’ திரைப்படத்தை இயக்கியுள்ள அவர், இப்படம் மே 8ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்.
இயக்குநர் ரத்னகுமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘லியோ 2’ திரைப்படம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். தற்போது அந்தத் திட்டத்திற்கு வாய்ப்பு இல்லை என்றும், முதலில் ‘கைதி 2’ திரைப்படம் முடிந்து, ‘லியோ’ திரைப்படத்தின் பின்னணி இசை தொகுப்பு வெளியாகிய பிறகே அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து பேச முடியும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ‘லியோ 2’ திரைப்படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளை தானே இயக்கியதாகவும், ‘விக்ரம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாதியையும் தானே இயக்கவுள்ளதாக பரவி வரும் வதந்திகள் தன்னை சிரிக்க வைக்கின்றன என்றும் அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “லோகேஷின் கதையை நான் இயக்குவதாக இருந்தது, அது நடக்காமல் போனதால் அவர் குழுவிலிருந்து என்னை நீக்கிவிட்டார் என்ற வதந்திகளும் பரவின. ஆனால் அதற்கு முன்பே நான் ‘29’ படத்தை இயக்க முடிவு செய்திருந்தேன். தற்போது அந்தக் கதை பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘பென்ஸ்’ என உருவாகி வருகிறது. இதுபோன்ற வதந்திகளை முழுமையாகத் தடுக்க முடியாது. பொதுவாக எந்தப் பிரசாரமும் நல்ல பிரசாரமே என எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
—
