தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் பிறந்த நாக துர்கா, சிறு வயதிலிருந்தே நாட்டுப்புற பாடல் மற்றும் நடனங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். 14 வயதிலேயே நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கிய அவர், இதுவரை 1600க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல விருதுகளை வென்றுள்ளார்.
கொரோனா காலத்தில் தனது நாட்டுப்புற நடனங்களை காணொளியாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டதன் மூலம் பெரும் புகழைப் பெற்றார். அவருடைய சில காணொளிகள் 150 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ‘கலிவி’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இந்தப் படம் வெளியாகும் முன்பே தமிழில் ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தில் அவர் ஒப்பந்தமாகி நடித்துள்ளார். இந்தப் படத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பவிஷ் நாராயண் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மகேஷ் ராஜேந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். நடனத்தில் சாதனை படைத்த நாக துர்கா, நடிப்பிலும் அதே அளவு வெற்றி பெறுவாரா என்பது படம் வெளியான பிறகே தெரியவரும்.
