கணவர் திகந்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் விருப்பத்தை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தனது பெற்றோருடன் சமரசம் செய்து கொள்ளவும், தனது தங்கையின் திருமணத்தில் பங்கேற்கவும் மனைவியை அழைத்து வருகிறார். ஆனால், மிகவும் கட்டுப்பாடுகளுடன் இயங்கும் அந்த குடும்ப சூழலுக்கு தன்னை பொருத்திக் கொள்வதில் சிரமப்படும் சமந்தா, கணவரின் மகிழ்ச்சிக்காக அந்த குடும்பத்துடன் இணைந்து வாழ முயற்சி செய்கிறார்.
இதற்கிடையில், சமந்தாவை பார்க்கும் ஒருவர் அவரை ‘ஜான்சி’ என்று அடையாளம் காண்கிறார். அதனைத் தொடர்ந்து, அவரது கடந்தகால வாழ்க்கையைச் சுற்றிய பல மர்மங்கள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்குகின்றன. அதே நேரத்தில் சிறையில் இருக்கும் கர்ணா, சமந்தாவை தேடி வருகிறார். இறுதியில் கர்ணாவுக்கும் சமந்தாவுக்கும் என்ன தொடர்பு உள்ளது? அவர் ஏன் தனது உண்மையான அடையாளத்தை மறைத்து வாழ்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதையாக அமைந்துள்ளது.
கதாநாயகியாக நடித்துள்ள சமந்தாதான் இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய பலமாக திகழ்கிறார். அமைதியான குடும்பப் பெண்ணாகவும், அதே சமயம் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டும் பெண்ணாகவும் இரண்டு விதமான பரிமாணங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அவரது அர்ப்பணிப்பும் உழைப்பும் தெளிவாக வெளிப்படுகிறது. படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், சமந்தாவின் பின்னணி குறித்த மர்மங்கள் வெளிப்படத் தொடங்கியவுடன் திரைக்கதை விறுவிறுப்பாக மாறுகிறது. குறிப்பாக இடைவேளைக்கு முந்தைய காட்சிகள் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கின்றன.
இடைவேளைக்குப் பிறகு, சமந்தா மற்றும் கர்ணா இடையேயான மோதலை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. சில காட்சிகள் ரசிக்க வைக்கும் வகையில் அமைந்திருந்தாலும், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை எளிதாக கணிக்க முடிவது திரைக்கதையின் பலவீனமாக மாறுகிறது. கர்ணா கதாபாத்திரமும் வழக்கமான வில்லன் பாணியிலேயே பயணிக்கிறது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் காட்சிப்பதிவும் தரமாக அமைந்துள்ளது. குறிப்பாக பேருந்து நிலைய சண்டைக் காட்சியும், கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியும் ரசிகர்களை கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன.
குடும்ப உறவுகள், கடந்தகால ரகசியங்கள் மற்றும் ஒரு பெண்ணின் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் நந்தினி ரெட்டி. நல்ல கதைக்களத்தை தேர்வு செய்திருந்தாலும், இரண்டாம் பாதி திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற எண்ணத்தை படம் ஏற்படுத்துகிறது. இருந்தபோதிலும், சமந்தாவின் வலுவான நடிப்பும், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஆக்ஷன் காட்சிகளும் திரைப்படத்தை தாங்கி நிற்கும் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன.
