தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றான ‘பில்லா’ தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்த இந்தப் படத்தில் நமீதா, நயன்தாரா மற்றும் பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது ரஜினிகாந்த் நடித்த 1980ஆம் ஆண்டு வெளியான ‘பில்லா’ திரைப்படத்தின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் மூலம் அஜித் குமாரின் ஸ்டைலும் நடிப்பும் புதிய உயரத்தை எட்டியது. தற்போது, அஜித் குமார் பிறந்த நாளை முன்னிட்டு வரும் மே 1ஆம் தேதி ‘பில்லா’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. நவீன 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்தப் படம், தமிழ்நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்ட ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
