பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து, பின்னர் ஹாலிவுட் படங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தி தனித்துவமான இடத்தை பெற்றுள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய திரைப்படங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தற்போது இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்த! நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், புகழ்பெற்ற ஓவியர் அம்ரிதா ஷெர்-கில்லின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மீரா நாயர் ஒரு புதிய திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். ‘அம்ரி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இப்படத்தில் பிரியங்கா சோப்ரா ஏற்கும் கதாபாத்திரம் திரைவெளியில் குறுகியதாக இருந்தாலும், கதையின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வலுவான பாத்திரமாக இருக்கும் என கூறப்படுகிறது. ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்ததும், ‘அம்ரி’ படத்தில் அவர் இணைவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
