மலையாள நடிகையான மீரா வாசுதேவன் 2003ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படமான Rules: Pyaar Ka Superhit Formula மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து மலையாளத்தில் தன்மாத்ரா, குடும்பவிளக்கு உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
தற்போது 44 வயதாகும் மீரா வாசுதேவன், அண்மையில் அளித்த பேட்டியில் தனது திருமண வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார். தனது வாழ்க்கையில் நடந்த மூன்று திருமணங்களையும் முட்டாள்தனமான முடிவுகள் என்று குறிப்பிட்டுள்ள அவர், அவற்றால் தனது வாழ்க்கையின் மதிப்புமிக்க 17 ஆண்டுகள் வீணாகிவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மூன்று முட்டாள்தனமான திருமணங்களுக்காக வாழ்க்கையின் 17 ஆண்டுகளை வீணடித்துவிட்டேன் என்று என் மகனிடம் அடிக்கடி சொல்வேன். அந்தக் காலத்தைச் சரியான முறையில் பயன்படுத்தியிருந்தால் சினிமாவில் இன்னும் சாதித்திருக்கலாம். எனக்கான நல்ல நண்பர்கள் வட்டத்தை உருவாக்கியிருக்கலாம். அதுமட்டுமின்றி, என் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டிருக்க முடியும். ஆனால், என்னை மதிக்காமலும், எனக்கான முக்கியத்துவத்தை அளிக்காமலும் இருந்தவர்களுக்காக என் வாழ்க்கையின் நேரத்தைச் செலவழித்துவிட்டேன் என்று வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
