“இந்தியாவில் தற்போதைய நடிகைகளில் சிறந்த நடிகை சாய் பல்லவி” என ஹிந்தி நடிகர் அமீர் கான் பாராட்டியுள்ள நிலையில், தமிழ் நடிகை சாய் பல்லவி ‘ஏக் தின்’ திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் அறிமுகமாகிறார். அமீர் கானின் மகன் ஜுனைத் கான் கதாநாயகனாக நடிக்க, சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் வரும் மே 1-ஆம் தேதி வெளியாகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த பல நடிகைகள் கடந்த காலங்களில் ஹிந்தி திரையுலகில் அறிமுகமாகி அங்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளனர். கருப்பு-வெள்ளை காலகட்டத்தில் தமிழில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே ஹிந்தியில் புகழ்பெற்ற நடிகையாக உயர்ந்தவர் வைஜெயந்திமாலா. தமிழில் ‘காலம் மாறிப் போச்சு’, ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ போன்ற படங்களில் பாடல்களுக்கு மட்டும் நடனமாடிய வகிதா ரஹ்மான், பின்னர் ஹிந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
அதேபோல் தமிழில் ‘இது சத்தியம்’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய ஹேமமாலினி, பின்னர் ஹிந்தியில் அறிமுகமாகி நீண்ட காலம் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். மேலும் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்தபோதே ஹிந்தியிலும் அறிமுகமாகி அங்கு நம்பர் 1 நடிகையாக விளங்கியவர் ஸ்ரீதேவி. இவர்களுக்குப் பிறகு சில தமிழ் நடிகைகள் ஹிந்தி திரையுலகில் முயற்சி செய்தாலும், இவர்கள் அளவிற்கு வெற்றி பெறவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது சாய் பல்லவி ஹிந்தி திரையுலகில் அறிமுகமாகிறார். ஏற்கனவே மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் நல்ல படங்களில் நடித்துத் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ள அவர், ‘ஏக் தின்’ திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் எப்படி வரவேற்பைப் பெறுகிறார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
—
