தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துவந்த சூரி, தற்போது கதாநாயகனாக உயர்ந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவர் தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகும் ‘மண்டாடி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும் இதில் சுஹால், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘மண்டாடி’ திரைப்படம் படகுப் போட்டியை மையமாகக் கொண்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. சுமார் 75 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த படம், சூரி அவர்களின் நடிப்பில் முதல் மிகப்பெரிய பட்ஜெட் படமாக அமையும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. இந்த திரைப்படம் கோடை காலத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி வந்த ‘மண்டாடி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கடலோரப் பகுதிகளில் மிகுந்த சவால்களுடன் படமாக்கப்பட்ட காட்சிகளின் மேக்கிங் வீடியோக்களையும் வெளியிட்டு, படப்பிடிப்பு நிறைவடைந்ததை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
