நடிகர் அஜித் குமார் 1993ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் ‘ஆசை’, ‘காதல் கோட்டை’, ‘வாலி’, ‘அமர்க்களம்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ போன்ற திரைப்படங்கள் அவருக்கு பெரும் ரசிகர் வட்டத்தை உருவாக்கி தந்தன.
1999ஆம் ஆண்டு வெளியான ‘அமர்க்களம்’ திரைப்படம் ஆக்ஷன் மற்றும் காதல் அம்சங்களால் நிறைந்த ஒரு முக்கியமான படைப்பாக அமைந்தது. இந்த படத்தில் ஷாலினி, அஜித் குமாருக்கு இணையாக நடித்திருந்தார். அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகவும் விரும்பப்படும் படங்களில் ஒன்றாக ‘அமர்க்களம்’ திகழ்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரை வாழ்க்கையிலும் முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்தன. இப்படத்தில் ரகுவரன், ராதிகா, நாசர், அம்பிகா, வினு சக்ரவர்த்தி, சார்லி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இது அஜித் குமாரின் 25வது திரைப்படமாகும். அஜித் – ஷாலினி திருமண நாளை முன்னிட்டு, அவர்கள் இணைந்து நடித்த ‘அமர்க்களம்’ திரைப்படம் நேற்று மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் காட்சியை திரையரங்கில் பார்த்த பின்னர், இயக்குநர் சரண் செய்தியாளர்களை சந்தித்து, அஜித் – ஷாலினி இடையேயான காதல் சம்பவங்களை நேரடியாக பார்த்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்தப் படத்தின் தொடக்க கட்டத்தில், தியேட்டரில் படமாக்க வேண்டிய காட்சிகளை எடுத்து கொண்டிருந்தோம். அப்போது ஒரு பக்கம் ஷாலினி மேடமும், மற்றொரு பக்கம் அஜித் சார் நின்று கொண்டிருந்தார்கள். அது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு. ஆரம்பத்தில் அஜித் சார், ‘நான் மற்ற படங்களை முடித்த பின்பு உங்களுக்கு தேதிகளை தருகிறேன்’ என்று கூறினார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு, ‘இந்தப் படத்திற்காக முழுமையாக தேதிகளை வழங்குகிறேன், விரைவாக படத்தை முடித்துவிடுங்கள்; இல்லையெனில் இந்த பெண்ணை நான் காதலித்து விடுவேனோ என்ற பயம் இருக்கிறது’ என்று கூறினார். அதை கேட்டதும் ஷாலினி வெட்கத்தில் முகம் சிவந்துவிட்டது. அது ஒரு காதல் வெளிப்பாட்டைப் போன்றதே. அந்த நேரத்தில் படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்பிற்காக தயார் செய்து கொண்டிருந்தனர். அந்த நிகழ்வை நான் மட்டுமே நேரில் கண்டேன். பின்னர் அந்தக் காதல் உண்மையாக உருவெடுத்தது. மேலும், அஜித் – ஷாலினி இடையே நடந்த ஒரு காதல் உரையாடலை அவர்களுக்கு தெரியாமல் படமாக்கி, அதை திரைப்படத்தில் இரண்டு இடங்களில் பயன்படுத்தியுள்ளோம். அந்த காட்சிகள் எவை என்பதை படம் பார்த்து கண்டுபிடிக்கலாம். அவற்றைப் பார்க்கும்போது, அஜித் சார் வாசு என்ற கதாபாத்திரமாக இல்லாமல், அவராகவே தோன்றுவார் என்றார்.
மேலும் அவர் பேசுகையில் அஜித் சார் தனது ரசிகர்களை மிகுந்த மதிப்புடன் பார்க்கும் நபர். ரசிகர் மன்றங்களில் பதவி போன்ற அமைப்புகள் காரணமாக அவர்களுக்குள் அரசியல் நிலை உருவாகி, அவர்கள் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்ளும் சூழல் உருவாகிறது. இதற்கு நான் சம்மதிக்கவில்லை. ரசிகர்கள் நல்லிணக்கமாக இருக்க வேண்டும், எந்தவித மோதலும் இருக்கக் கூடாது என்பதற்காகவே அவர் ரசிகர் மன்றத்தை கலைத்தார்” என்று தெரிவித்தார்.
