சில மாதங்களுக்கு முன்பு மலையாளத் திரையுலகில் மம்முட்டி மற்றும் விநாயகன் இணைந்து நடித்த ‘களம்காவல்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை ஜித்தின் கே ஜோஸ் இயக்கியிருந்தார். இப்படத்தில் விநாயகன் கதாநாயகனாகவும், மம்முட்டி எதிர்மறை கதாபாத்திரத்தில் வில்லனாகவும் நடித்திருந்தனர். குறிப்பாக, மம்முட்டியின் வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படம் மிகப்பெரிய வசூலைப் பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அடுத்து, ‘மாயன்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்குநர் ஜித்தின் கே ஜோஸ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகனாக ஜெயசூர்யா நடித்துள்ளார். சமீபத்தில் ஜெயசூர்யா நடிப்பில் வெளியான ‘ஆடு 3’ திரைப்படம் 100 கோடிக்கும் மேற்பட்ட வசூலை ஈட்டிய நிலையில், அவரது அடுத்த மிகப்பெரிய படைப்பான ‘கத்தனார்’ திரைப்படமும் விரைவில் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
இந்த சூழலில், தற்போது ஒப்பந்தமாகியுள்ள ‘மாயன்’ திரைப்படத்தில் ஜெயசூர்யா ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
—
