ஹாலிவுட் நடிகர் டென்சில் வாஷிங்டன் நடித்த ‘தி ஈக்குவலைசர்’ திரைப்படத்தை இயக்கிய ஆண்டனி ஃபுகுவா, தற்போது மைக்கேல் ஜாக்சன் அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ‘மைக்கேல்’ என்ற பயோபிக் திரைப்படத்தை இயக்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்த நேரத்தில், அவரைப் பற்றிய பொதுவாக அதிகம் அறியப்படாத சில முக்கிய தகவல்கள் தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றன.
• 1984ஆம் ஆண்டு பெப்சி குளிர்பான விளம்பர படப்பிடிப்பின்போது ஏற்பட்ட வெடி விபத்தில், மைக்கேல் ஜாக்சனின் தலைமுடியில் தீப்பற்றியது. இந்த விபத்தில் அவரது தலையில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதால், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அவர் தனது வாழ்க்கையின் பிந்தைய கட்டங்களில் விக் பயன்படுத்தத் தொடங்கியதற்கான முக்கிய காரணம் இந்த சம்பவமே ஆகும்.
• ‘Smooth Criminal’ பாடலில் மைக்கேல் ஜாக்சன் முன்னால் சாய்ந்து ஆடும் புகழ்பெற்ற நடனம் எந்தவித கேமரா தந்திரங்களாலும் உருவாக்கப்படவில்லை. அதற்காக அவர் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஷூவை பயன்படுத்தினார். அந்த ஷூ மேடையுடன் இணைந்து லாக் ஆகும் வகையில் இருந்ததால், அவர் கீழே விழாமல் சாய்ந்து ஆட முடிந்தது.
• 1990களின் இறுதியில் மார்வெல் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டது. அப்போது மைக்கேல் ஜாக்சன் அந்த நிறுவனத்தை வாங்குவதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டார். அதை வாங்கிய பிறகு, லைவ் ஆக்ஷன் திரைப்படத்தில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் தானே நடிக்க வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், அது நிறைவேறாமல் போனது.
• மைக்கேல் ஜாக்சன் தனது தோல் நிறத்தை மாற்றிக் கொண்டார் என்பது போன்ற கருத்துகள் பரவலாக பேசப்பட்டாலும், உண்மையில் அவருக்கு விடிலிகோ என்ற தோல் நோய் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மரணத்திற்குப் பின்னர் நடைபெற்ற உடற்கூறாய்விலும் இந்த நோய் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. தோலில் ஏற்பட்ட வெள்ளை தழும்புகளை ஒரே மாதிரியாகக் காட்டுவதற்காகவே அவர் சிகிச்சை பெற்றார். மேலும், கறுப்பின மக்களின் முன்னேற்றத்திற்காகவும், இசைத்துறையில் சமத்துவம் நிலவ வேண்டுமெனவும் அவர் தொடர்ந்து குரல் கொடுத்தார்.
• உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தபோதிலும், தனிப்பட்ட வாழ்க்கையில் மைக்கேல் ஜாக்சன் மிகுந்த தனிமையை அனுபவித்தார். அந்த தனிமையை சமாளிக்க, தனது பண்ணை வீட்டில் மனிதர்களைப் போலவே தோற்றமளிக்கும் மானெகின்களை ஒரு அறை முழுவதும் வைத்து வைத்திருந்தார். அந்தச் சிலைகள் மனிதர்கள் சூழ்ந்திருப்பது போன்ற உணர்வை வழங்கும் என அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
• மைக்கேல் ஜாக்சனின் செல்லப் பிராணியான ‘பப்பிள்ஸ்’ என்ற சிம்பன்சி, அவர் எங்கு சென்றாலும் அவருடன் பயணம் செய்த நெருங்கிய துணையாக இருந்தது. தற்போது அந்த சிம்பன்சி சென்டர் ஃபார் கிரேட் ஏப்ஸ் என்ற குரங்கு பாதுகாப்பு மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் தற்போதைய வயது 43 ஆகும்.
• மைக்கேல் ஜாக்சனுக்கு புத்தக வாசிப்பில் தனிப்பட்ட ஆர்வம் இருந்தது. அவரது பண்ணை வீட்டில் 10,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட பெரிய நூலகம் இருந்தது. அதோடு மட்டுமல்லாமல், பொதுநூலகங்களுக்கு புத்தகங்களை தானமாக வழங்கியும் அவர் சமூகப் பொறுப்பை வெளிப்படுத்தினார்.
• 1984ஆம் ஆண்டு நடைபெற்ற கிராமி விருதுகள் விழாவில், ஒரே இரவில் 8 விருதுகளை வென்று சாதனை படைத்தார். தனது வாழ்நாளில் மொத்தம் 13 கிராமி விருதுகளை அவர் பெற்றுள்ளார். மேலும் 1993ஆம் ஆண்டு நடைபெற்ற சூப்பர் பவுல் நிகழ்ச்சியில் அவரது நிகழ்ச்சி உலகம் முழுவதும் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இந்த நிகழ்ச்சிக்காக அவர் எந்தவித ஊதியமும் பெறவில்லை; அதற்கு பதிலாக தனது ‘Heal the World’ அறக்கட்டளைக்கு நிதி வழங்க வேண்டும் என்றும், அதற்கான விழிப்புணர்வு விளம்பரத்தை ஒளிபரப்ப வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.
