நடிகர் விஷால், அண்ணா நகர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். வாக்களித்ததற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது கருத்துகளை பகிர்ந்தார்.
அவர் கூறுகையில், “சைக்கிளில் வந்து வாக்களிப்பது எந்த விதத்திலும் பெரிய விஷயம் அல்ல. எனக்கு சைக்கிளில் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். இதற்கு முன்பும் பலமுறை நான் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தியுள்ளேன். எல்லா தொகுதிகளிலும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமெனில், மக்கள் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துவது அவசியம்.
அரசியல்வாதிகள் தங்களது பொறுப்புகளை முறையாக நிறைவேற்றினால், நடிகர்கள் அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியமே இருக்காது. ஆனால், அரசியல்வாதிகள் தங்கள் கடமைகளை சரியாக செய்யாத காரணத்தினால்தான் சில சமயங்களில் நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அண்ணா நகர் தொகுதி வளர்ச்சியடைந்ததா என்று கேட்டால், அது முழுமையாக இல்லை என்று தான் சொல்ல முடியும். பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலங்களில் நாங்களே நேரடியாக இறங்கி பணியாற்றியுள்ளோம். புதிய அரசு பதவியேற்ற பின், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து தொகுதிகளிலும் உள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
